
நேற்று வவுனியாவில் தமிழ்ப்பெண் உள்ளிட நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சிங்கள மக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்களக்குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
இதேவேளை வவுனியயா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினைச் சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறைமுகத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறைமுகத்தினைச் சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தந்தையான 34 அகவையுடை மார்க்கண்டு சிவராசா என்பவரே படுகொலை செய்யப்பட்டு இவரது உடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது.நேற்று முன்னாள் காணமல்போன இவர் நேற்று உடலமாக கிணற்றில் கண்ட்டெடுக்கப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்து பெண்ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது உடலங்கள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.