‘சனல் – 4’ ஒளிநாடா விவகாரத்தை சிறிலங்கா அமைச்சருடனான பேச்சின்போது கிளப்பிய ஐ.நா. செயலாளர் நாயகம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் ‘சனல்-4’ காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை ‘சனல் – 4’ தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவைச் சந்தித்த ஐ.நா. செயலாளர் நாயகம் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியதுடன், போரின் பின்னர் உருவாகியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்தாக ‘ரொய்ட்டர்’ செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது. “நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களின் பேச்சில் ஆராயப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் ஆராய்ந்தார்கள்” என இந்தச் சந்திப்பு தொடர்பாக நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிநாடா தொடர்பாகவும் இந்தப் பேச்சுக்களின்போது பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாக ஐ.நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த காணொலிக் காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்திருக்கின்ற போதிலும், பான் கீ மூன் இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது அமைச்சர் மகிந்த சமரசிங்க எவ்வாறு பதிலளித்தார் என்பதையிட்டு ஐ.நா. வட்டாரங்கள் தகவல் எதனையும் வெளியிடவில்லை. காலநிலை மாற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறும் மாநாட்டின் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போதே அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த காணொலி ஒளிநாடா தொடர்பாக தமது கரிசனையை ஐ.நா. சபை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே பான் கீ மூன் அது தொடர்பாக இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றார். இந்த ஒளிநாடா தொடர்பான செய்திகள் தம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாக ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ் நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதேவேளையில் ஐ.நா. சபையின் சட்டத்துக்குப் புறம்பான, எழுந்தமானமான விசாரணைகளற்ற படுகொலைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அல்ஸ்டனும், இது தொடர்பாக ஐ.நா. விசாரணை ஒன்றை தொடங்க வேண்டும் என கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருந்தார்.

Share.

Comments are closed.