‘சனல் – 4’ காணொளி தொடர்பாக பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்: பிலிப் அல்ஸ்ரன்

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறீலங்காப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி குறித்த பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் மனித உரிமைகள் நிபுணர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நீதிக்குப் புறம்பான, விசாரணைகளற்ற படுகொலைகள் தொடர்பான ஐ.நா. விசாரணையாளர் பிலிப் அல்ஸ்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் அந்தக் காணொளி வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு மிக விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளமை குறித்து அந்த அறிக்கையில் அல்ஸ்ரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணைகளின் முடிவு “முழுமையானது” அல்லது “பக்கச்சார்பற்றது” என அவர் தனது அறிக்கையில் கருத்துக்கள் எவையும் தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக விசாரணைக் குழு நிபுணர்களில் இருவர் தரைப்படை அதிகாரிகளாக இருப்பது கேள்வி எழுப்பக்கூடியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நிபுணர், முன்னர் அரசின் சார்பில் செயற்பட்டு வந்தவர். நான்காவது நிபுணர் எந்த வழிவகையில் விசாரணைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.  “இறுதியான கேள்வி என்னவென்றால், அரசால் வழங்கப்பட்ட தகவல்கள் அந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து குறிப்பிட்ட கேள்விகளை எழுப்புகிறதா? இந்தக் கேள்வியின் அடிப்படையில் எனது தீர்மானம், காணொளியின் நம்பகத் தன்மை குறித்து இறுதி முடிவு ஒன்றுக்கு வருவதற்கு முன், அதன் மீதான விமர்சனங்கள் எழுப்பும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே.

இதனை மேற்கொள்வதற்கான ஒரே வழி பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார் அல்ஸ்ரன்.

‘சனல் – 4’ நிறுவனத்தின் காணொளி தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இந்த மாத தொடக்கத்திலும் அல்ஸ்ரன் வலியுறுத்தி இருந்தார். ஆனால், தொடக்கம் முதல் இதனை நிராகரித்துவரும் சிறீலங்கா அரசு அந்தக் காணொளி பொய்யானது, புனையப்பட்டது எனக் கூறி வருகின்றது.

இதற்கிடையே, மனித உரிமைகள் விடயம் குறித்து அனைத்துலக சமூகத்தால் கோரப்படும் எந்த ஒரு விசாரணையையும் சிறீலங்கா அரசு நிராகரிக்கும் என அரச ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா கூறினார். “சர்வதேசத்தின் இத்தகைய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என நான் நினைக்கவில்லை.

எங்களுடைய பதிவுகள் நேர்த்தியாக இருக்கின்றன. பல்வேறு அனைத்துலக அமைப்புக்களுக்கும் எமது நிலைப்பாடு தொடர்பாக நாம் விளக்கி வருகின்றோம். இத்தகைய நகர்வுகள் எல்லாம் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனனேயே மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்

Share.

Comments are closed.