சர்வதேசத்தையும் இலங்கை ஏமாற்றியது; இறுதியுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்: ஐ.நா. அதிகாரி கோர்டன் வெய்ஸ்

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது 14 வருட சேவையில்
இருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள கோர்டன் வெய்ஸ் இலங்கை மோதல் குறித்து புத்தகமொன்றை எழுதி வருகிறார்.

இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது எனத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் பலியாகினர் என நான் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களே இதனைத் தெரிவித்தன.

பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக இக் காலப் பகுதியில் உறுதியளித்து வந்தது.

பொதுமக்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாது, இதுவே பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் பாரம்பரியமாகவும், வழிகாட்டும் கொள்கையாகவும் உள்ளது,

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்றெல்லாம் இலங்கை அரசு தெரிவித்து வந்தது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் என நான் கருதும் பொதுமக்களின் எண்ணிக் கையைக் கருத்தில் கொள்ளும்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது புலனாகின்றது.

சகல விதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.

பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கமுடையவையாகவும் அவை காணப்பட்டன.

அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போர் முனையில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துக் கூறியது என அரச அதிகாரியொருவரே ஏற்றுக்கொண்டிருந்தார்.

விடுதலைப்புலிகளும் மக்களைத் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர்.

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்குட்படுத்த வேண்டும். என்றார் அவர்.

 

Share.

Comments are closed.