இலங்கையின் வடபகுதி முழுவதும் ஏகே.47ஐத் தாங்கிய இராணுவச் சீருடை தரித்தவர்களையே காண முடிகின்றது: வெளிநாட்டு ஊடகவியலாளர் லீ யூ குவாங்

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையின் வடபகுதி முழுவதும் ஏகே.47 ஐத் தாங்கிய இராணுவச் சீருடை தரித்தவர்களையே காண முடிகின்றது. ஏகே.47 ஐத் தாங்கிய இராணுவச் சீருடை அணிந்தவர்களே இலங்கையின் வடபாகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர். மன்னாரிலிருந்து இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு வரை அங்குள்ள மக்களைவிட இராணுவத்தினரே அதிகமாகக் காணப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்து ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கின் நிலைமை இதுதான். இலங்கை இராணுவம் நடாத்திய போரின் இறுதி மாதத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் தோற்கடிப்பதற்கு முன்னதாக இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான சுதந்திர அரசொன்றுக்காகப் போராடினார்கள். இலங்கையின் சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் கொண்ட இலங்கை அரசால் திட்டமிட்ட முறையில் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வந்தார்கள்.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் பயணிகள் அடையாள அட்டைப் பரிசோதனைக்காக தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். வவுனியாவிலிருந்து நான்கோ ஐந்து கி.மீற்றர் தொலைவில் இருக்கும் இந்தச் சோதனைச்சாவடிக்கு வவுனியாவிலிருந்து பயணிகள் வருவதற்கு முன்பாக ஏற்கெனவே மூன்று முறை அவர்கள் அடையாள அட்டைப் பரிசோதனைக்கு ஆளாகியிருப்பார்கள்.

வடக்கின் பிரதான நகரான யாழ்ப்பாணத்திற்குச் செல்பவர்கள் அங்கிருந்த வருபவர்கள் இவ்வாறு சோதனைக்கு ஆளாகிறார்கள்.

அதிகம் கவலைப்பட ஏதுமில்லை. இது அவர்களுடைய வழமையான சோதனை நடவடிக்கை தான் என்றார் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் இருந்த ஒரு தமிழ் பயணி எனக்கு ஆறுதல் கூறுமுகமாக.

சமாதானம் வந்து விட்டது. நீங்கள் எங்கும் போய் வரலாம் என்கிறது அரசு. எவ்வாறிருந்த போதும் இந்த எங்கேயும் என்பது எல்லோருக்குமானது அல்ல. பாதுகாப்பு அமைச்சிலிருந்து அனுமதி பெற்றிருக்காவிட்டால் வெளிநாட்டவர்கள் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள். புறப்படுவதற்கு முன்னால் பாதுகாப்பு அமைச்சிற்கு தொலைபேசி எடுத்து அனுமதி கேட்டேன். அப்பகுதிக்குச் செல்வதற்கு அவர்கள் அனுமதித்திருந்தார்கள். எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் அதற்கான அனுமதியைக் காட்டாத காரணத்தால் நான் திருப்பி அனுப்பப்பட்டேன்.

வெளிநாட்டவர்கள் பெருமளவில் விமானம் மூலம் மட்டுமே யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பெருமளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள, போரின் காரணமாகச் சூறையாடப்பட்ட பிரதேசங்களைக் கொண்ட ஏ9 வீதியூடாக வெளிநாட்டவர்கள் பயணம் செய்வதை அரசாங்கம் விரும்புவதில்லை.

மன்னாரின் தலைநகரப்பகுதியும் மன்னாரிலிருந்து வவுனியா வரையான வீதி எங்கிலும் பல இராணுவச் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதி எங்கணும் மூலை முடுக்குகள் எல்லாம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அது போல சிறிய கிராமங்களிலும் தெருவெங்கும் அவர்கள் நிறைந்துள்ளனர்.

பெரும்பான்மைச் சிங்களவர்களுடைய மொழியிலுள்ள “அங்காலை போ” “இங்காலை வா” “பாக்கைத் திற” என்பன போன்ற சில சிங்களச் சொற்களையே அங்குள்ள தமிழ்க் கிராமங்களிலுள்ள பெரும்பாலானவர்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள். அப்பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் தமிழில் கடுமையான வார்த்தைகளைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர்.

வழமையாக தொடர்பாடல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் இந்த சோதனைச்சாவடிகள் அபாயம் நிறைந்தவையாக இருந்து வந்துள்ளன. இறுதியாக இவ்வாறான சோதனைச்சாவடியில் காணப்பட்ட பலர் பின்னர் எப்போதுமே காணாமலே போயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் திரும்பி வந்ததேயில்லை. 

“2007இல் எனது கணவரை இவ்வாறானதொரு சோதனைச்சாவடியில் தான் கண்டதாகத் தெரிவித்தனர் என்கிறார் அனோஜா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மறுநாள் அது பற்றி அறிவதற்காக அந்த சோதனைச்சாவடிக்கு சிங்களம் பேசக் கூடிய எனது அயலவர் ஒருவருடைய உதவியுடன் சென்றேன். அங்கிருந்த படையினன் ஒருவன் உள்ளே வந்து சோதிக்குமாறு எங்களுக்குச் சொன்னான். பயத்தின் காரணமாக நாங்கள் அங்கிருந்து வந்து விட்டோம் என்றார் அவர்.

தனது கணவர் காணாமல் போனது குறித்து தான் முறையிட்ட இடங்களான பொலிஸ் நிலையம், மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றால் வழங்கப்பட்ட கடிதங்களை அனோஜா கொண்டு வந்து காண்பித்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு பெண் 2007இல் காணாமல் போன தனது சகோதரரைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவரும் இறுதியாக இவ்வாறான ஒரு சோதனைச்சாவடியிலேயே காணப்பட்டார் என்று அவருக்குத் தகவல் கிடைத்திருந்தது. 35 வயதான இன்னொரு பெண்மணி தனது தாயாரை இழந்திருந்தார். 1990களில் அவருடைய மூத்த சகோதரரும் சகோதரியும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

மிக நீண்ட மூன்று தசாப்தகாலப் போர் முடிவடைந்த பின்னரும் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் மிக மோசமான முறையில் அதிகரித்துச் செல்கிறது. ஏற்கெனவே அங்கு ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் முடிந்த தறுவாயில் மூன்று இலட்சம் உள்ளக இடம் பெயர்ந்தோர் இருந்துள்ளனர். அவ்வப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழேயே மீள் குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன. மீள் குடியேற்றத்துக்குத் தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் இச் சோதனை நிலையத்தில் அவை முழுமையாகச் சோதனை இடப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும் அமைப்புக்களுக்கும் பெருமளவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்நிறுவனங்கள் தான் இம் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் பல்வேறு தேவைகளை நிறைவேறற்றி வந்தன.

எங்களுடைய நிறுவனத்தின் இலட்சினை பொருத்தப்பட்ட வாகனத்தை எடுத்து வர வேண்டாம் என்று அப்பகுதியில் இராணுவப் தளபதி எமக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்கிறார் உதவி நிறுவனப் பணியாளர் ஒருவர். அதேவேளை இலட்சினை அற்ற வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

மன்னாரின் ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் மீள் குடியேற்றப்பட்டார்கள். எனினும் வரப் போகும் மழைக்காலத்தை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பில் எத்தகைய வழிகளும் இன்றி இருக்கிறார்கள் அவர்கள். சர்வதேச தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகரங்களைக் கொண்ட தற்காலிகக் கொட்டில்களிலேயே அவர்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள்.

இடம் பெயர்ந்தோர் முகாமிலிருந்து ஒரு குடும்பம் விடுவிக்கப்படும் போது யுஎன்எச்சிஆரினால் 25000 ரூபாய் (ஏறத்தாழ 224 டொலர்கள்) வழங்கப்படுகிறது. உலக உணவுத்திட்டம் ஆறு மாதங்களுக்கு அடிப்படை உணவு வசதி அளிப்பதாக உறுதியளிக்கிறது.

அதிர்ஷ்டவசமாக் ஓகஸ்ட் வரை உலக உணவு உதவித்திட்டம் உதவியளித்திருக்கிறது. இது ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலமாகும் என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி. தற்போது அரசாங்கம் விதைநெல் தந்துள்ளது. அதன் அறுவடையைப் பெறும்வரை ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு எமக்கு உணவேதும் இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

கிராமத்தவர்களுக்கு பொது இடங்களைச் சுத்தம் செய்வது போன்ற சில வேலைகள் கிடைக்கின்றன. அதற்கு நாளொன்றுக்கு 4.5 டொலர் வழங்கப்படுகிறது. ஆனால் அது நிரந்தரமற்ற ஒரு தொழில். இக்கிராமங்களில் மருத்துவ வசதிகளோ மின்சாரமோ கிடைப்பதில்லை. படிக்கும் மாணவர்கள் உள்ள சில குடும்பங்களுக்கு கரித்தாஸ் நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் லாம்புகளை வழங்கியிருக்கிறது.

அதேவேளை உதவிப்பணியாளர்களும் அரசாங்கமும் இப்பிராந்தியத்தில் இக்கிராமமே மிகச்சிறந்த மீள்குடியேற்றக் கிராமம் என்று கூறுகின்றன. கிராமத்தவர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கு நிலவும் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து முறைப்பாடு செய்கின்றன.

சஞ்ஜீவ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 32 வயதான களப்பணியாளர் சொல்கிறார் பெரியமடுக்கிராமத்தைச் சூழ மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு அரசாங்கமும் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்ய அனுமதிக்கவும் இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.

கடந்த ஆகஸ்டில் குடியேற்றப்பட்டவர்களுக்கு மலசல கூடங்கள் இல்லை. செப்டம்பரில் மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு தனியே கூரைத் தகடுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பரின் ஆரம்பத்தில் 255 குடும்பங்களைச் சேர்ந்த 1215 பேர் முல்லைத்தீவில் தமது சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படாமல் முல்லைத்தீவு இராணுவத் தளபதி ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது அவர்கள் ஒரு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அரசாங்கம் தமிழ் மக்களை இவ்வாறு கொடுமையான சூழ்நிலைகளின் கீழேயே வருடக்கணக்கில் வைத்திருக்க விரும்புகிறது. அப்போது தான் இந்த மக்கள் உணவையும் தங்குமிடத்தையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு போதும் அரசியல் மற்றும் சமூகவியல் உரிமைகள் குறித்துச் சிந்திக்க மாட்டார்கள் என்கிறார் இன்னொரு தமிழ் அரசியல்வாதியான மனோ கணேசன். இது தான் பலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பலஸ்தீனர்கள் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது ஒன்றும் தற்செயலானது அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற ஒரு வழிமுறை. குறித்த கிராமத்தின் கட்டமைப்பு அவ்வாறு தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கு பிரதானமாக உள்ளது இராணுவ முகாம் தான். பல வருடங்களாக இடம் பெயர்ந்து இருந்துவிட்டு தடுத்து வைக்கப்பட்ட இடம் பெயர்ந்தோர் முகாமிலிருந்து உங்களது சொந்தக் கிராமத்துக்கு திரும்பி வந்த போது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று 32 வயதேயான பத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வைக் கேட்ட போது அவர் விசும்பியபடியே “பயங்கரம்” என்றார்.

ஒரு சிறிய இடைவெளியின் பின் அவர் தொடர்ந்து சொன்னார் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழேயோ அல்லது எங்களைச் சூழ்ந்து இராணுவம் இருக்குமாறே வாழ்ந்து பழக்கப்படாதவர்கள் நாங்கள். இது மிகப் பயங்கரமாக இருக்கிறது என்று.

இடம் பெயர்ந்தோர் முகாம்களிலும் நிலைமை இவ்வாறு தான் உள்ளது. தற்போது பெருமளவான இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். யுஎன்எச்சிஆரின் அறிக்கையின்படி ஆகஸ்ட் 30 வரை 258,846 இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 25,000 தொடக்கம் 30,000 வரையானோர் இன்னமும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முட்கம்பிகளுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தடுத்;;து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை எவ்வளவு சாத்தியமாக விரைவாக விடுதலை செய்யமுடியுமோ அவ்வாறு விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் இன்னம் இருப்பவர்கள் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவே தெரிவிக்கிறார்கள். வலயம் 4ல் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமிலிருக்கும் 21 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார் ஆகஸ்ட்டிலிருந்து போதுமானளவு தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை என்று. மின்சாரமோ ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரமே வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இராணுவமும் அரச அதிபரும் எங்களை முகாம் மாறச் சொன்னார்கள். எங்களில் பலர் அதனை நிராகரித்தோம். ஏனெனில் மறுபடி புலிச்சந்தேகநபர்கள் என்ற கோதாவில் எம்மை இராணுவ அதிகாரிகள் கைது செய்து கொண்டு செல்வார்கள் என்பதால் நாம் அதனை எதிர்த்தோம்.

முகாமிலிருந்து வெளியில் சென்று தமக்கு அனுமதிக்கப்பட்ட 10 நாட்களைவிட தாமதமாக வந்த ஒருவரை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியதாகவும் ராணி குறிப்பிடுகிறார். வலயம் 4 முகாமிலிருக்கும் 35 வயதான சரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள உணவுத் தட்டுப்பாடு பற்றியும் ஏனைய அவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பற்றியும் சொல்கிறார். பருப்பையும் சோறையும் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். மரக்கறிகளோ வேறேதுமோ வழங்கப்படுவதேயில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். மூன்று மாதங்களுக்கு முன்னரே சவர்க்கார விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் அவர் சொல்கிறார்.

சரா என்கிற இந்தப் பெண்மணி தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தன்னந்தனியனாக இந்த முகாமில் இருக்கிறார்.

சரா மற்றும் ராணி ஆகியோர் சொல்பவை ஐநாவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஆணையகத்தின் ஜுன் மாத அறிக்கையை உறுதி செய்கின்றன. அவ்வறிக்கை சொல்கிறது: யுஎஸ் எய்ட்டால் வழங்கப்பட்டு வந்த உணவு விநியோகம் 31 மே மாதத்துடன் முடிவடைகிறது. குடிநீருக்கான தட்டுப்பாட்டுக்கு ஜுலை இறுதியில் வாய்ப்பிருக்கிறது.

ஆசியாவின் மிக நீண்ட யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களின் பின்னரும் இலங்கையில் உள்ள தமிழர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. பதிலாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்ப பலத்தை அரசியலில் நிறுவுவதற்கான முனைப்புக்களையே மேற்கொண்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

செப்டம்பர் எட்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புத் திருத்தம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இது ஜனாதிபதியின் பதவிக்கால எல்லையை அகற்றுவதுடன் எல்லா சுயாதீனமான ஆணைக்குழுக்களுக்கும் தலைவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

எவ்வித பொதுமக்களுக்கான அறிவிப்பு எதுவும் இல்லாமலே எவ்வித வாதவிவாதங்களும் இல்லாமலே எவ்வித ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படாமலே இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியரான ரொகான் எதிரிசிங்க.

இது இனப்பிரச்சினை விடயத்தை ஒதுக்கி விட்டுவிடுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். தமிழ் சிறுபான்மையினரை மோசமாக ஒதுக்கித் தள்ளும் நடவடிக்கைகளுக்கு இது வழிகோலும். தற்போது இந்தத் தீவு ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட அரசாட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

‐ லீ யூ குவாங் ‐ கிறீன் லெப்ற் வீக்லி ஊடகவியலாளர் 

Share.

Comments are closed.