ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது. இறுதியில், இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள் GSP+ வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது.இலங்கை மீதான, மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இவ்விசாரணையின் போது ஆராயப்பட்டது.
இலங்கைக்கான தூதுவர் ‘முன்னாள் போராளிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுப் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,குழந்தைப் போராளிகள் புனர்வாழ்வு மையங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப் படுகின்றனர்’ எனக் கூறியதுடன் இலங்கை மனிதவுரிமை விடயங்களிற் கூடிய கவனஞ் செலுத்துவதாகவும் மனிதவுரிமை மீறல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழ் ஒருங்கமைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன், இலங்கைத் தூதுவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ள முடியாததும் உண்மைக்குப் புறம்பானதுமென மறுத்துத் தன் விவாதத்தை விசாரணைக்குழுவின் முன் வைத்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை ‘நவீன கொலோகாஸ்ற்’ என வர்ணித்த தமிழ் ஒருங்கமைப்பு இலங்கை அரசு மக்களை முகாம்களில் அடைத்தும் சித்திரவதை செய்தும் வருகிறது என்று தெரிவித்தது. முன்னர் விடுவிக்கப்பட்டவர்கள் கூட தற்காலிக முகாம்களில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையின் வடக்குப் பிரதேசம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறிக் கொண்டிருக்கிறதெனவும் குற்றஞ் சாட்டப்பட்டது.
இலங்கையரச தூதுவர், முன் வைத்த எல்லாவிதமான விவாதங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. கடந்த 2008லிருந்து ஒரேயொரு குழந்தை மட்டுமே போராளியாக்கப் பட்டுள்ளார் எனத் தூதுவர் தெரிவித்தார்.அதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழ் ஒருங்கமைப்பு, தொடர்ந்தும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் எட்டு வயதுடைய குழந்தையுட்பட பல சிறார்கள் இலங்கையரசினால் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதையை அனுவிப்பதாகவும் எம்மிடம் அதற்கான ஆதாரமுண்டு எனவும் வாதிட்டது.
கடந்த 2008 டிசம்பரிலிருந்து ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே கடத்திச் செல்லப்பட்டதாக, எல்லை தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பின் இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தூதுவர் குறிப்பிட்டார். எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த வின்சன்ட் புறசல் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து,நேற்று முன்தினம் கூட பி.பி.ஸி யின் உள்நாட்டு நிருபர் அரசைச் சார்ந்த அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டாரெனவும் அவர் அரசின் தேர்தற் பிரச்சாரக் கூட்டமொன்றிற் செய்தி சேகரிக்கச் சென்ற போதே தாக்கப்பட்டாரெனவும் விசாரணைக் கமிசனிற் தெரிவித்தார்.
இலங்கைத் தூதுவர், 2004 இல் சுனாமியாற் பாதிக்கப்பட்டோர் சார்பாக வேண்டுகோளொன்றை வைத்துப் பரிதாபந் தேடும் முயற்சி செய்தார். தமிழ் ஒருங்கமைப்பாளர் ‘ராஜபக்ஷ அரசு உதவிப்பணம்,வரிச்சலுகைகளை மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குச் செலவிடுகின்றதேயொழிய பெரும்பாலும் இப்பணம் பாதிக்கப் பட்ட மக்களைப் போய்ச் சேரவில்லை” யென இலங்கையரசின் நடைமுறையைச் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோய்ஹிக்கின்ஸ் GSP+ சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென வாதிட்டதுடன், இலங்கையரசு ‘புதிய புதிய செய்திக்’ கதைகளைத் தயாரித்துப் பரப்பி விடுகிறதெனக் குற்றஞ்சாட்டினார். அங்கிருக்கும் யதார்த்த நிலையை இலங்கையரசு திரிக்கிறது.மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் இந்தச் செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும் கமிசனுக்கு வலியுறுத்தினார்.
மேலும் அவர் தனது விவாதத்தில் ‘சாதாரண தொழிலாளருக்கோ வறிய இலங்கை மக்களுக்கோ பாதகமான ஒரு சூழலை உருவாக்கும் நோக்கம் யாருக்கும் இல்லை. இந்த வரிச்சலுகை இரத்துக்கான முழுப் பொறுப்பும் இலங்கையரசையே சாரும்’ எனவும் குறிப்பிட்டார்.
இறுதியில், இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள் GSP+ வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.