இலங்கைத் தமிழர்களுக்காக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாக இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ் ஏ போய்ல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர் சூழல் நிலவரங்கள் குறித்த நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்ததைத் தொடர்ந்து, போய்ல் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கம் இதனை தேவையற்ற ஒன்றாக கருதி, நிராகரித்துள்ளமையை விமர்சித்துள்ள அவர், காஸா தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான குழு ஒன்றை ஏற்கனவே நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நிபுணர்கள், கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பிலான நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தருணமே இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக சிறந்த தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் மேற்குலக நாடுகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையை போலவே, இந்த முறை ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர்கள் குழுவையும் அரசாங்கம் நிராகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் காலம் கடந்தேனும் ஐக்கிய நாடுகள் சபை தாம் மேற்கொண்டிருக்க வேண்டிய கடமையை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.